மதுரையில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமி, ரூ.8 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

Published Date: February 19, 2024

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் ஒலிம்பிக் அகாடமி செயற்கை ஓடுதளம் அமைச்சர் உதயநிதி தகவல்:

மதுரையில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமி, ரூ.8 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

மதுரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கருணாநிதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் சங்கீதா வரவேற்றார். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் முன்னிலை வகித்து பேசினர்.

திட்டத்தை துவக்கி உதயநிதி பேசியதாவது: இந்தத் திட்டம் மூலம் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளுக்கு ரூபாய் 86 கோடியில் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 

இதனால் விளையாட்டு துறையில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படும். இத்துறையில் கருணாநிதி பெயரில் துவங்கப்பட்ட முதல் திட்டம் இது. 

அரசியல், எழுத்து போல் விளையாட்டின் மீதும் கருணாநிதி ஆர்வம் கொண்டவர். விளையாடும் ரசிகர் டீம் ஒர்க் திறமை மீது நம்பிக்கை கொண்டவர். நல்ல டீம் இருந்தாலே வெற்றி தான்.

முதல்வர் ஸ்டாலின் திட்டங்களால் விளையாட்டு துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கேலோ இந்தியா உள்ளிட்ட சர்வதேச போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சி.ஐ.ஐ உள்ளிட்ட அமைப்புகள் பல விருதுகளை தமிழகத்திற்கு வழங்கி வருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரையில் ரூபாய் 6 கோடியில் ஒலிம்பிக் அகாடமி  ரூ. 8 கோடியில் செயற்கை ஓடு தளம் அமைக்கப்படவுள்ளது. 

மதுரையில் கட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன் அமைச்சர் மூர்த்தி தலைமையில் 1360 குழுவினருக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினேன்.தற்போது துறை சார்பில் இத்திட்டத்தை துவங்கியுள்ளேன் என்றார்.

மதுரையில் ரூபாய் 5 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையத்தை உதயநிதி துவக்கி வைத்தார். 

கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மேயர் இந்திராணி பொன்வசந்த், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், எம்.பி. வெங்கடேசன், எம்.எல்.ஏக்கள். தளபதி வெங்கடேசன், பூமிநாதன் பங்கேற்றனர்.

Media: Dinamalar